திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய வழக்குகளும் கனிணி மயம்
தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் இணைய தளம் மூலம் இணைக்கப்பட்டு, புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) மூலமாக ஆவணங்கள், குற்ற நிகழ்வுகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் குற்றவாளிகள் மாநிலத்திலுள்ள எந்த பகுதியிலாவது குற்றம் புரிந்தால் அவரைப்பற்றிய தகவல்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் தகவல் பரிமாற்றம் செய்யப்படும். இதேபோல் காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத பிரேதங்கள், திருட்டு போன வாகனங்கள் பற்றிய விபரங்கள் பரிமாறப்பட்டு, கண்டுபிடிக்க எளிதாக்கப் பட்டுள்ளது. இது மாநில குற்றப்பதிவேடுகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கடந்த 10 ஆண்டுகளுக்கான அனைத்து வழக்கு கோப்புகளும் கணினி மயமாக்கும்பணி, திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கணினி பயிற்சி மையத்தில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தனராஜால் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக்காவல் கண்காணிப்பாளர் வானுமாமலை, நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஜெயசுப்பிர மணியன், மன்னார்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அன்பழகன், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் கணினி பயிற்சி மைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
